Thursday, October 16, 2008

பகுத்தறிவு For Dummies !!!

பகுத்தறிவு பற்றி நிலவும் பெரும் குழப்பம் காரணமாக ஏகப் பட்ட பிரச்சினைகள் இன்னைக்கு நாட்டுல நடந்துகிட்டு இருக்கிறது. வலைப் பதிவுகளில் பார்த்தால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு முத்திரை குத்தி வச்சிருக்காங்க. இவர் ஒரு கொண்டை இவர் இப்படித்தான் எழுதுவார். இவர் ஒரு குல்லா இவர் இப்படிதான் எழுதுவார். அவர் பகுத்தறிவுவாதி அதனாலே அவர் அப்படித்தான் எழுதுவார்.




இதிலே குல்லாக்கள் ஒரு சில குல்லாக்களை இவர் போலி குல்லா இவருக்கு சரியான குல்லா பத்தி தெரியலே அப்பிடினும், கொண்டைகள் மற்ற கொண்டைகளைப் பத்தி போலி கொண்டைன்னும், எல்லாரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ பகுத்தறிவுவாதிகளை போலிகள்னும் சொல்லிக் கிட்டே இருக்காங்க. பகுத்தறிவு வாதிகளே இன்னொரு பகுத்தறிவு வாதியைப் பார்த்து நீங்க சொன்னது கொள்கைக்கு முரணானது அதனாலே நீங்க உண்மையிலேயே பகுத்தறிவு வாதியா இல்லைனா போலியா அப்பிடினும் பின்னூட்ட கச்சேரி நடத்தி வருகின்றனர்.

ஆகையினாலே ஏதோ நமக்கு தெரிஞ்சதை எளிமையாச் சொல்லி வப்போமே அப்பிடினுதான் இந்த பதிவு.

அந்த வகையில பார்த்தா நம்ம முன்னாடி ரெண்டு கேள்விகள் இருக்கு. 1). கடவுள் மறுப்புன்னா என்ன? 2). பகுத்தறிவுன்னா என்ன?

இதிலே யார் கடவுள் மறுப்பாளர்கள் அப்படிங்கிற கேள்விக்கு பொதுவா கடவுள் இல்லைனு சொல்றவங்க எல்லாம் கடவுள் மறுப்பாளர்கள் என்பது....



தவறான விடை!..

எப்பிடினா? இப்போ உலகத்திலே ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கு. குறைந்த பட்சம் ஒரு மதத்துக்கு ஒரு கடவுளாவது இருக்கும். எல்லா மதத்துக் காரங்களும் அடுத்த அல்லது மற்ற மதத்துக் கடவுள்களை மறுக்காங்க.. இப்பொ என்ன ஆயிப் போச்சு மற்ற மதக் கடவுள்களை மறுக்கிறதாலே அவங்கல்லாம் கடவுள் மறுப்பாளர்கள் வகையில சேர்ந்துடுதாங்க..

இந்த மத்த மதத்துக் கடவுளை மறுக்கும் கடவுள் மறுப்பாளர்கள் எல்லாம் அவங்க கடவுள் சொன்னதைக் கேக்கிறாங்களானு பார்த்தா அதுவும் இல்லை. இவங்க இவங்களோட சொகுசு வாழ்க்கைக்காக புதுசு புதுசா எதாவது பண்ணி கடவுள் படைச்சதை அல்லது சொன்னதை மறுக்கிறாங்க. இது எப்பிடினா ரொம்ப எளிமையானதுதான்.. எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். மறுபடியும் சொன்னா சலிச்சுக்கிட மாட்டீங்கனு நினைக்கேன். இவங்க கடவுளோட படைப்புக்கு எதிரா முடியை வெட்டிக்கிறது, நகத்தை வெட்டிக்கிறது, உடை அணியறது இந்த மாதிரி. அப்போ இவங்க இவங்களோட கடவுள் செஞ்சதையும் மறுக்கிறாங்க..

இதுலே ஒருசிலர் அவங்க கட்வுள் சொன்னதையோ அல்லது படைச்சதையோ அப்பிடியே கடைப்பிடிக்கக் கூடியவங்களும் இருக்காங்க. அதுக்காக நாம அவங்களைப் பாராட்ட முடியாது. நீங்களே நினைச்சுப் பாருங்களேன் நகம் வெட்டிக்காம, முடி வெட்டிக்காம, உடை அணியாம. கொடூரமா இருக்காது.

அந்த மட்டில் பெரும்பான்மையான மதவாதிகளும் அல்லது மதத்தைப் பின்பற்றக் கூடியவர்களும் கடவுள்மறுப்பாளர்களாக இருக்காங்களேனு மகிழ்ச்சிதான். இல்லனா நாறிப் போயிரு(க்கு)ம்லா..

இப்போ கடவுள் மறுப்பாளர்கள்னா யாருன்னு தெரிஞ்சு போச்சு. இதை வச்சுக்கிட்டு பகுத்தறிவுன்னா என்ன? யார் பகுத்தறிவாளர்கள் அப்பிடினு பார்க்கலாம்.

பகுத்தறிவைப் பத்தி உலகப் பொதுமறை திருக்குறள் தந்த அய்யன் திருவள்ளுவர் என்ன சொல்லுதாருன்னா...

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எளிமையாச் சொல்லனும்னா என்ன விஷயமா இருந்தாலும் இவன் சொன்னான் அவன் சொன்னான் அப்பிடினு நம்பிடாம, அல்லது இந்த புத்தகத்திலே இருக்கு, அந்த புத்தகத்திலேஇருக்கு அப்படினு நம்பிவிடாமல் அதில் எந்த அளவுக்கு உண்மையிருக்குனு ஆராய்ந்து பார்த்து பிறகுதான் முடிவுக்கு வரணும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா என்ன சொல்லுதுனா..

“பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.”

மனிதனுக்கு மட்டும் தான் சரியா, தவறா, நல்லதா, கெட்டதா அப்பிடினெல்லாம் சிந்திக்கக் கூடிய வகையில் ஆறறிவு இருப்பதாக சொல்லப் படுகிறது. அதைப் பயன் படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.

மூடநம்பிக்கையில்லாதவங்க எல்லாம் பகுத்தறிவாளர்கள்னு சொல்லலாம். இந்த ஒரே வரியில் எல்லாமே அடங்கிரும். இப்போ ஒருத்தரு பகுத்தறிவுவாதியா இருக்கணும்னா பெரியாரியலையோ, மார்க்சியத்தையோ கரைச்சுக் குடிச்சிருக்கனுங்கிற அவசியம் இல்லை. தன் முன் வைக்கப் படுகிற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி விடை கண்டால் போதும். முன்னால் சொல்லப் பட்டது அப்பிடின்கிறதாலே அப்பிடியே நம்பி விடக் கூடாது. இதையேதான் பெரியாரும் மற்றெல்லாத் தலைவர்களும் அவங்கவங்க மொழியில சொல்லிருக்காங்க..

இந்த உலகத்திலே ஒரு மதவாதியாக இருப்பது மிகவும் எளிது. ஆனால் முன்னோர்கள், பெற்றோர்கள், சமூகம் அத்தனைக்குள்ளும் கட்டமைக்கப் பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்து வெளிவந்து பகுத்தறிவாளராய் இருப்பதே சவாலானது. இந்த சவாலைச் சமாளித்து வெற்றி நடைபோடும் அனவருக்கும் வாழ்த்துகள்.

எல்லாத்துக்கும் மேலே ஒருத்தன் மூடநம்பிக்கைகளை விடுத்து பகுத்தறியத் துவங்கி விட்டானோ, அவன் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கிறவனாயிருக்கிறான். சுயனலமற்றவனாயிருக்கிறான். தனி மனித ஒழுக்கங்களைப் பேணுபவனாய் இருக்கிறான்.

என்னை இந்த பதிவு எழுதுமாறு தூண்டிய செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.


” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை“

நானும் திருக்குறள் சொல்லி முடிக்கிறேன்.

6 comments:

Anonymous said...

அறிவியல் துறை எவ்வளவுக்கு எவ்வளவு மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் முன்னேறினாலும், நம்மாட்கள் அறிவியல் கண்டுப்டிப்புகளை கொண்டே மூடநம்பிக்கைகளையும், கடவுளையும் பரப்புகின்றனர். பகுத்தறிவு சமுதாயம் காண்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது.

Anonymous said...

"கடவுள் கடவுள் என்று கதறுகின்ற மனிதர்காள்" தானாக உண்ர்ந்தால் தான் உண்டு. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

வசந்தத்தின் தூதுவன் said...

அய்யா சுனா பானா மற்றும் அனானி அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முகவை மைந்தன் said...

//” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை“

நானும் திருக்குறள் சொல்லி முடிக்கிறேன்.//

:-))))))))))))

Anonymous said...

///.அறிவியல் துறை எவ்வளவுக்கு எவ்வளவு மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் முன்னேறினாலும், நம்மாட்கள் அறிவியல் கண்டுப்டிப்புகளை கொண்டே மூடநம்பிக்கைகளையும், கடவுளையும் பரப்புகின்றனர். பகுத்தறிவு சமுதாயம் காண்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது///

ஜீசஸ், புள்ளையார் படத்தை இமெயிலில் அனுப்பி இதை இருவது பேருக்கு அனுப்பினா இன்னைக்குள்ள நீ கோடீஸ்வரன் ஆகிடுவ என்பது இதில் சேர்த்தி

Anonymous said...

good message.....please go on.....

csoupramanien