Tuesday, December 7, 2010

இத்தனை நாளாய் ம.தி.மு.கவில் தான் இருந்தேன்: தாணு ஒப்புதல்!

பெரும்பாலான கறுப்பு ஆடுகள் களையெடுக்கப் பட்டுவிட்ட போதும் வெகு சில ஆடுகள் இன்னும் மந்தைக்குள் இருக்கத்தான் செய்கின்றன. அவை எவை என்பது மேய்ப்பனுக்கு நன்றாக தெரிந்தே இருக்கிறது. கூட்டமாகத் துரத்தியபோது செல்லாத ஒற்றைக் கருப்பாடு இப்போது வேடம் கலைத்திருக்கிறது.

கலைப்புலி தாணு அவர்கள் ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்ததில் இருந்து அவர் இத்தனை நாளாக ம.தி.மு.க.வில் தான் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தபோது பத்திரிக்கையாளர் சுதாங்கன் அவரை, நீங்கள் ம.தி.மு.க. வில் இருக்கிறீர்களா? எனத் துருவித் துருவிக் கேட்டபோதும் மழுப்பலான பதிலையே தந்தார். இப்போது என்னவோ தான் ம.தி.மு.க. வில் தான் இருந்ததுபோல விலகல் கடிதம் கொடுத்துள்ளார்.

வசந்தத்தின் தூதுவன் வைகோ இவருக்கு சட்டமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்ததையே கொச்சைப் படுத்தி, வைகோ இவரிடம் மட்டுமல்லாமல் இவர் வீட்டு உறுப்பினர்களிடமும் போய் கெஞ்சியதாகக் கூறியவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரை நிற்கச் சொல்லி கெஞ்சியதாக கூறுபவர் எப்படி இவரை வைகோ முன்னிலைப் படுத்தவில்லை என்று கூற முடியும்?

நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததே நான்கு இடங்கள். ஒன்றில் வைகோ வும், ஒன்றில் கணேசமூர்த்தி எம்.பி அவர்களும், ஒன்றில் முன்னாள் பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன் அவர்களும் மற்றதில் துணைப் பொதுச்செயலாளர் துரை பால கிருஷ்ணனும் போடியிட்டனர். இவர்களில் எவர் தகுதியற்றவர்? தகுதியுடையோர் எண்ணற்றவர்கள் இருப்பினும் இடம் கிடைக்காததுதான் குறை. இதில் இவர் சம்பத்துக்கு இடமளிக்கவில்லையென கேள்வி கேட்டாராம் வைகோ கோபித்துக் கொண்டாராம். நல்ல கற்பனை.

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடந்த பல போராட்டங்களுக்கு இவர் தலைமையேற்பார் என தலைமைக் கழகம் அறிவித்தும் போராட்டக் களங்களில் இவர் தலையே காட்டவில்லை. இவர் தலையே காட்டாத போது மீண்டும் மீண்டும் இவர் பெயரை முன்னால் போட்டு மூக்கறுபட முடியுமா?  மாநாட்டுக்கு அழைக்கவில்லையென குற்றம் சொல்கிறீர்களே? மாநாட்டுக்கு யார் அழைக்கவேண்டும்? வைகோ வந்து உங்கள் வீட்டில் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டுமோ? அப்படி வைகோ செய்தாலும், வைகோ என் வீட்டில் வந்து கெஞ்சி மாநாட்டுக்கு அழைத்தார் அதனால் போனேன் என்று கொச்சைப் படுத்த வாய்ப்பில்லாமல் போனதற்காக வருந்துகிறீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நீங்கள் கருணாநிதியிடம் விலை போய்விட்டது வைகோவிற்கும் தெரியும் ம.தி.மு.க. தொண்டனுக்கும் தெரியும் தாணு அவர்களே.

உங்களுக்கு உங்கள் தொழிலை நடத்த கருணாநிதியின் தயவு தேவை. சில நாட்களுக்கு முன் வெளிவந்த உங்கள் திரைப்படம் ஒன்றை கருணாநிதி குடும்ப ஊடக நிகழ்ச்சிகள் மூலம் தூக்கி நிறுத்தினீர்களே அது போல. அதைச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு போகிற போக்கில் வரலாற்று நாயகன் வைகோ மீது சேற்றை வாரி இறைப்பானேன்?

வைகோ அவர்கள் உங்களுக்கு செய்த உதவிகளில் பகுதியளவே எங்களுக்குத் தெரியும். முழு அளவும் உங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாணு அவர்களே.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.