Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டைத் தாக்குவதா? தமிழினத் துரோகி கருணாநிதிக்கு கண்டனம்

பச்சைத் தமிழர் பழ.கருப்பையா நல்ல தமிழில் பேசக் கூடியவர். தனித்தமிழில் பேசியும் எழுதி வந்தவர். செட்டிநாட்டு பின்புலத்தில் இருந்து வந்து தமிழர் பண்பாட்டை பாரறிய பரப்பி வந்தவர். தமிழினத் துரோகி கருணாநிதியின் கயமைத் தனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களிலும், தொலைக்கட்சிகளிலும் கருத்துரை வழங்கிவந்தார். அவருடைய கருத்துரைகள் தமிழ் மக்களையெல்லாம் வெகுவாக ஈர்த்துவந்தது.




இந்நிலையில் கருணாநிதியின் கபட வேடங்களையும், செம்மொழி நாடகத்தையும் பற்றி பகிரங்கமாக நேர்காணலிலும், கட்டுரைகளில் எழுதி வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி கும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மக்களாட்சியின் மீது அக்கறை கொண்ட எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இந்த செயல் கருணாநிதியின் அழிவையே காட்டுகிறது.



மக்கள் விரோத கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஆட்டோ வருமா? அல்லது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவு விரைவில் வருமா?

Friday, June 18, 2010

கருணாநிதியின் மாநாட்டை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

தான் நடத்தப் போகும் மாநாட்டிற்காக கருணாநிதி எழுதியிருக்கும் பாடல் ஒரு கேலிக் கூத்து. அவரது கட்சியில் கூட சில சில்லரைக் கவிஞர்கள் உள்ளனர். அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு இவர் பேசாமல் நடிகைகளின் விண்ணப்பங்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்திருக்கலாம். அதை விடுத்து தன் பெயரை முன்னிலைப் படுத்த வேண்டுமென்பதற்காக கவிதை எழுத கிளம்பிவிட்டார்.

சரி வந்ததுதான் வந்தார், சொந்தமாக எழுத ஒரு வரி கூடவா கிடைக்கவில்லை. இவர் எழுதிய கவிதை அப்படியே ஆறாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் உள்ளடக்கம் பகுதியில் வருவது போல இருக்கிறது. பாடப் புத்தகத்தின் உள்ளடக்கம் பகுதியில் தான் புத்தகத்தின் உள்ளே என்ன உள்ளது என்பதை பக்க வரிசையுடன், பாடல்களின் தலைப்பு அல்லது முதல் வரி குறிப்பிடப் பட்டு இருக்கும். பக்க எண்களை நீக்கிவிட்டு படித்தால் அது கவிதையாகி விடுமா? ஏதேனும் பொருள் தருமா? அது போலவே சில பாடல்களின் முதல் வரியைக் காப்பியடித்து பக்கத்தை நிரப்பி பொருளற்ற வகையில் பாடல் இயற்றி, அதற்காக பாராட்டுக்களை வாங்கிக் குவித்துள்ளார் இந்த இலக்கிய பயில்வான்.

செம்மொழி தமிழை வாழ்த்திப் பாடிய பாடலில் பொருளே இல்லை. தமிழ் எப்படி செம்மொழியாகும் தகுதியுடையது என்பதை விளக்கும் வரிகளே இல்லை. இது இப்படி இருக்க தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதிலாக இப்பாடல் இடம்பெறுமாம். மனோன்மனீயம் சுந்தரனார் அவர்களால் சுயமாக சிந்தித்து தமிழின் தொன்மை பெருமைகளைக் குறித்துப் பாடப்பட்ட ”நீராறும் கடலுடுத்த” என்ற பாடலுக்கு எந்த வகையில் இவர் பாடல் நிகராகும். இதற்காக ஒரு பாராட்டு விழாவா? நாமும் பாராட்டி விடுவோம். இதன் மூலம் இவர் காப்பியர் கருணாநிதி என்றழைக்கப் படுவாராக.



தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் அழித்தொழித்து விட்டு அனைத்து இடங்களிலும் தன் பெயரும், அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் தன் குடும்பத்தினர் பெயர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல் பட்டு வரும் கருணாநிதி நடத்தப் போகும் இந்த மாநாடும் அதற்கான இன்னொரு முயற்சிதான்

அண்ணாவால் துவக்கப் பட்ட இயக்கத்தை தன் குடும்பம் என்கிற ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட கருணாநிதி இப்போதெல்லாம் மேடைகளில் அண்ணா பற்றி அதிகம் பேசுவதில்லை. அவரே அப்படியென்றால் மற்றதுகள் என்னவோ தி.மு.க.வைத் தோற்றுவித்ததே கருணாநிதி என்கிற தொனியிலேயே பேசி வருகின்றன. அண்ணாவின் நூற்றாண்டான கடந்த ஆண்டு சிறிய அளவில் கூட்டம் நடத்தி முடித்து கொண்டது க.தி.மு.க.(கருணாநிதி தி.மு.க.)

இப்படி தி.மு.க. என்கிற இயக்கத்தைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் பெயரையே இருட்டடிப்பு செய்து தன் பெயரை முன்னிலைப் படுத்தி வரும் கருணாநிதி சில நாட்களுக்கு முன் செய்த ஒரு அடாத செயல் தமிழக சட்ட மன்றக் கட்டிடம் கட்டியது. திறப்பு விழாவிற்கு முன்பாக பீகார் தொழிலாளர்கள் எல்லாம் சும்மா என்பது போலும் தானே கல் சுமந்து கட்டி முடித்தது போலும் தோற்றத்தை ஏற்படுத்த காலையில் எழுந்தால் ஓமந்தூரார் தோட்டம், மாலையில் அடைந்தால் ஓமந்தூரார் தோட்டம் என்று காட்சியளித்தார். கட்டிடம் மேலெழுந்து வர வர அனைத்து மக்களும் முகம் சுழிக்கும் வகையில் ஒரு அவமானச் சின்னம் போல, எண்ணெய் தொட்டிபோல வடிவத்தில் வந்து நின்றது. இன்னும் கட்டி முடிக்கப் படவில்லை. திறப்பு விழாவிற்காக அவசர கோலத்தில் ஒப்பனை செய்யப் பட்ட அந்த கட்டிடம் இப்போது ஒப்பனை கலைக்கப் பட்டு காணச் சகிக்காத வகையில் வேலை நடந்து கொண்டு வருகிறது. தன் பெயரில் வர வேண்டுமென்பதற்காக அவசரம் அவசரமாக ஒப்பனை செய்யப் பட்ட கட்டிடத்தில் மீண்டும் முதலில் இருந்து பணிகள் துவக்கப் பட்டுள்ளன. அழித்து அழித்து விளையாட இது என்ன சிறு பிள்ளை விளையாட்டா?

 இதில் என்ன கொடுமையென்றால் கட்டிடத்தில் துளியளவும் தமிழர் கட்டிடக் கலையோ, திராவிடக் கட்டிடக் கலையோ இல்லாமல் போனதுதான். எங்கேயோ சீனாவில், இந்தோனேசியாவில், வியட்னாமில், மற்றும் கீழைத் தேயங்களிலெல்லாம் தமிழர் கட்டிடக் கலையில் சோழர் கட்டிய கட்டடங்களை இப்போது காணும் போதும் பெருமை கொள்கிற நாம் தமிழகத்தின் தலை நகரில், அரசு தலைமைச் செயலகத்தைத் தமிழர் கட்டடக் கலையைப் புறந்தள்ளி வெட்கித் தலை குனியும் வகையில் ஒரு அவமானச் சின்னமாக்கி மக்கள் பணத்தை வீணடித்துள்ளார் இந்த கருணாநிதி. கட்டிட மேஸ்திரி கருணாநிதி இப்போதெல்லாம் அங்கு வருவதேயில்லையாம்.


செய்தித்தாள்களின் பசிக்குத் தீனி செய்திகளா? அல்லது மக்கள் பணத்தில் அரசு வழங்கும் பக்கம் பக்கமாக வெளிவரும் விளம்பரங்களா? இப்போதெல்லாம் மக்களாட்சியின் நான்காம் தூண்களான செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்கள் பிரச்சினையை, அரசின் ஊழலை, முறைகேடுகளை வெளியிட முன் வருவதேயில்லை. அப்படி வெளியிட்டால் அரசு விளம்பரங்கள் பெற்று கல்லாக் கட்ட முடியாது. நான்கு வரியில், சிறிய அளவில், கருப்பு வெள்ளையில், வெறும் எழுத்துக்களில் ஒரு ஒரு விளம்பரம் என்றாலே ஆயிரக் கணக்கில் வசூலிக்கும் செய்தித்தாள் நிறுவனங்கள் பக்கம் பக்கமாய் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு எத்தனை கோடிகள் வசூலிக்கும். இதில் தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் முரசொலியின் மறு பதிப்பாகவே வெளிவருகின்றன. கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தினத்தந்தி நாளிதழுக்கு அரசு செலுத்திய விளம்பரக் கட்டணம் மட்டும் நாலாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று பத்திரிக்கைத் துறை நண்பர் வெளியிட்ட தகவல் அதிர வைக்கிறது. இது உண்மையானால் தினத்தந்தி முரசொலியின் மறு பதிப்பென்ன, கருப்பு சிவப்பு கறையுடனே வரலாம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. இப்போது கருப்பு சிவப்பு கறையுடன் வெளிவந்தால் அடுத்த ஆண்டு ஆட்சி மாறும் போது கறையை மாற்றும் சூழல் வரும்போது சங்கடமாகி விடாதா?


இந்த மாநாடு அறிவிக்கப் பட்ட நேரமும், நோக்கமும் என்ன? இந்திய அரசாலும், இலங்கை அரசாலும் அங்கே ஈழத்தில் தமிழ் மக்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப் படுகிறார்கள். இந்திய அரசில் பங்கு வகிக்கும் கருணாநிதி அதனைக் கண்டு கொள்ளாமல் உடந்தையாக இருந்ததுடன், தமிழகத்தில் தன்னெழுச்சியாக உருவான போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலும் திசை திருப்பும் வகையிலும் போலிப் போராட்டங்களை நடத்தி தமிழர் ஒன்றுபடுவதைத் தடுத்தார். முடிவில் போர் முடிந்தது. கருணாநிதியின் துரோகத்தால் ஏராளமான தமிழர்கள் செத்து மடிந்தனர். தான் செய்த துரோகத்தை மறைக்கவும், தனக்கு கிடைத்த புதிய பட்டமான தமிழினத் துரோகி என்கிற பட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நப்பாசையில் மக்களை ஏமாற்ற போட்ட முகச் சாயம் தான் மாநாடு. மழை பெய்தால் நரியின் சாயம் வெளுத்துப் போகும். நாட்டாமை பதவியும் போகும்.


இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்தவர்கள் அதற்கு ஊழல் பரவலாக்கும் மாநாடு என்று வைத்திருந்தால் சாலப் பொருத்தமாக இருந்திருக்கும். ஊழலில் ஊறித் திழைக்கும் கேடுகெட்ட கூடாரம் தன் பரிவாரங்களையெல்லாம் ஒரு பந்தலின் கீழ் அழைத்து வந்து, எங்களுக்கு திகட்டி விட்டது, நீங்களும் கொஞ்சம் அடிச்சுக்கோங்க அப்படினு 1000 கோடி அரசுப் பணத்தை (மக்கள் பணத்தை) ஒதுக்கி பந்தி வைக்கிறது. பரிவாரங்களுக்கு பந்தி வைக்க வேண்டுமென்றால் ஊழலில் சேர்த்த பணத்தில் இருந்து கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் குடும்பக் கருவூலத்தில் குறைவு ஏற்பட்டு விடாதா? ஆகவே தன் அடி வருடிகளை எல்லாம் பல்வேறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இத்தனை கோடிகள் ஒதுக்கீடு, உங்களால் முடிந்தவரை அடித்துக் கொள் என்று மக்கள் பணத்தை பங்கு வைக்கிறது. இவனுங்களுக்கு திறமையிலா பஞ்சம். சும்மா போட்டுத் தாக்குகிறானுங்க. இதிலே வேடிக்கை பார்க்கப் போகும் சாதா தமிழனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? டவுசர் கிழிவதுதான் மிச்சம்.