Wednesday, November 16, 2011

அப்துல் கலாம் பற்றிய வைகோவின் பேச்சும் (வீடியோ இணைப்பு), ஊடகங்களின் திரிப்பும்..



கடந்த 10-11-2011 அன்று சென்னையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவில் சிறப்புரையாற்றிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மறைமுகமாகத் தாக்கி பேசியதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அப்துல் கலாமையே தாக்கிப் பேசி விட்டாராமே? அவ்வளவு பெரிய விஞ்ஞானியைத் தாக்கிப் பேசலாமா? என மக்கள் மத்தியில் ஒரு கருத்தை எழுப்புவதற்காகவே இந்த செய்தி பரப்பப் பட்டது.

உண்மையில் வைகோ அவர்கள் அப்துல் கலாமின் தொழில் நுட்ப அறிவைக் கேள்வி கேட்கவே இல்லை.

புத்தக வெளியீட்டு விழாவில் வைகோ பேசியது:





அப்துல் கலாமை தமிழ்நாட்டு மக்கள் அறியும் முன்னரே, அவர் அரசு ஊழியராக இருந்த காலத்திலேயே, கூடங்குளம் அணு உலையை அறிமுகப் படுத்துகையிலேயே, தொலை நோக்குப் பார்வையோடு அதனைக் குறித்த தொழில் நுட்பங்கள் சார்ந்த கேள்விகளை  1988 லியே  நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அணு உலை மூலமாக மின்சாரம் தயாரிப்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் வைகோ அவர்கள் மட்டுமே. அப்போது அப்துல் கலாம் அனேகமாக வெறும் விமானயியல் பேராசிரியராக மட்டுமே இருந்திருக்கக் கூடும்.

அந்த கால கட்டங்களில் இப்போது இருக்குமளவிற்கு ஊடகங்களோ, கணிணி இணையதள வளர்ச்சியோ இல்லாத காரணத்தால், அணு உலையையும் ஏதோ சாதாரண தொழிற்சாலை எனக் கருதிக் கொண்டு, நம்மூருக்கு தொழிற்சாலை வந்தால் எல்லாருக்கும் வேலை கிடைக்கும், நம் மாவட்டமே வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கும் என்ற மனப்பான்மையோடு, அந்த அரக்கனை வரவேற்றவர்கள்தான் அதிகமானோர்.

உண்மையில் அப்துல் கலாமின் பெயரிட்டு பக்கம் பக்கமாக வெளிவந்த அறிக்கைகள், அவரால் ஆய்வு செய்யப் பட்டு அவர் தயாரித்த அறிக்கையல்ல. மத்திய அரசின் மக்கள் தொடர்புத் துறையால் செமத்தியாக கவனிக்கப் பட்டு -மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த பாடலை படித்துக் காட்டி பரிசில் பெற வந்த தருமியைப் போல- வேறு சிலரால் தயாரிக்கப் பட்ட அறிக்கை அவர் பெயரில் வெளியிடப் பட்டுள்ளது.

அறிக்கை பற்றியும், அதில் இருக்கும் அபத்தங்கள் பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப் பட்டு விட்டதால், அறிக்கையிலே பின்வரும் கருத்தை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், வைகோ அவர்களது கேள்வி எவ்வளவு பொருத்தமானது என்பது விளங்கும்.

”கரிகாலன் கட்டிய அணை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் உறுதியாக உள்ளது அதுபோல கூடங்குளம் அணு உலையும் உறுதியானது”

அப்துல் கலாம் விமானயியல் விஞ்ஞானியாக இருந்தவர். அணு விஞ்ஞானியாக உருவெடுத்தவர். இந்த இடத்தில் கட்டடக் கலை நிபுணராகவும் அவதாரமெடுக்கிறார். இதைச் சொன்னால் கட்டடவியலைப் பற்றி நீயே பேசும் போது விஞ்ஞானியானவர் பேசக் கூடாதா என நம்மைப் பார்த்து பொங்கிவிடுவார்கள். ஆகவே அவர் எப்படிச் சொல்லலாம் எனக் கேள்வி கேட்கப் போவதில்லை. சொல்லட்டும் தாராளமாகச் சொல்லட்டும். ஆனால் மேற்சொல்லப் பட்ட இரண்டு கருத்துகளும்(அணைக் கட்டுக்கும், அணு உலைக்கும் சிறிதும் தொடர்பில்லையெனினும்) முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்கு நூறு சதம் பொருந்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் உறுதித் தன்மையை அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கட்டடக் கலை நிபுணர்களால் (நன்றாக கவனிக்கவும் விமானயியல் விஞ்ஞானியோ அல்லது அணு விஞ்ஞானி என்று கூறிக் கொள்பவரோ அல்ல) பரிசோதித்து சான்றளிக்கப் பட்டு, உச்ச நீதி மன்றத்தால் 152 அடிகள் வரை நீரைத் தேக்கிவைத்தாலும் அணைக்கு எந்தவித பாதிப்பும் நேராது என தீர்ப்பும் வழங்கப் பட்டுவிட்டது. ஆனால் கேரள அரசு மீண்டும் மீண்டும் அணையின் பாதுகாப்பைக் கேள்விக் குறிக்குள்ளாக்கி, மக்களிடம் பீதியை உருவாக்கி, அணையை உடைக்கத் திட்டமிட்டுள்ளது. அணை உடைக்கப் பட்டால், இப்போது இருக்கும் உயரத்தைவிட தாழ்வான பகுதியில் புதிய அணை கட்டப் பட்டாலோ தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காது. அப்படி நேர்ந்தால் அப்துல் கலாம் பிறந்த மாவட்டமான ராமநாதபுரம் உட்பட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும்.

எல்லா விஞ்ஞானிகளும் சொல்லிவிட்டபின் அப்துல் கலாம் அவர்கள் பெயரில் மாத்ருபூமியிலும், மலையாள மனோரமாவிலும் பத்துப் பக்கம், எட்டுக் கால அளவில் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உறுதியானது, ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வெளியிடச் செய்திருந்தால், அப்துல் கலாமின் கட்டடக் கலை அறிவை நாம் மெச்சலாம்.

ஆப்பிளுக்கு ஆப்பிளையும், அணைக்கட்டுக்கு, அணைக்கட்டையும் ஒப்பிடச் சொன்னது தவறா? அணைக்கட்டையும், அணு உலையையும் ஒப்பிடுவது விஞ்ஞானிக்கு தகுமா?

தான் பிறந்த மண் பாலைவனமாக மாறுவது குறித்தோ, பக்கத்து ஊரில் வாழும் மக்களை பக்கத்து நாட்டு ராணுவம் நாய்களைப் போல சுட்டுப் போடுவதையோ கண்டிக்க துப்பில்லாதவர், பல நூறு மைல்கள் தாண்டி வாழும் மக்களுக்கு பத்து அம்சத் திட்டம் போடுவதை யார் நம்புவார்கள்.

கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாம் தனது தனிப் பட்ட கருத்தை வெளியிடும் உரிமை அவருக்கு உள்ளது. ரஷ்ய நாட்டு நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு எழுதிக் கொடுத்ததை அவர் பெயரில் வெளியிட அனுமதிக்கும் உரிமையும் அவருக்கு உள்ளது. மண்டபத்தில் சுந்தரரால் எழுதிக் கொடுக்கப்பட்டு தருமியால் வாசிக்கப்பட்ட பாடலில் பொருட்குற்றம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் உரிமை நக்கீரருக்கு இருந்தது போல, அவரது அறிக்கை தவறு எனச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உள்ளது.




நிறைவாக, மத்திய அரசு ஒப்பந்தத்தில் கட்டப் படும் கட்டிடங்களின் உறுதித் தன்மைக்கு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டிற்காக கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களும், கூடங்களும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் என்பதை அணு உலையின் உறுதித் தன்மை பற்றி அறிக்கை தரும் முன்பாக நினைவில் நிறுத்திக் கொள்வது சிறப்பாகும்.



2 comments:

Anonymous said...

I feel comparing Nuclear plant with Tanjavur temple is relevent here. In last 1000 years there is no physical damage for the temple due to earth quake which is one of main reason people to oppose Nuclear Plant in Koodankulam. Please don't just oppose. We don't have other choice for electricity. Wind and Solar won't statisfy the needs like Nuclear Plant.

வசந்தத்தின் தூதுவன் said...

//I feel comparing Nuclear plant with Tanjavur temple is relevent here//

தஞ்சாவூர் கோவிலுக்கும் அணூலைக்கும் என்ன சம்பந்தம் நண்பா?

//In last 1000 years there is no physical damage for the temple due to earth quake which is one of main reason people to oppose Nuclear Plant in Koodankulam//

நீங்க எழுதியிருப்பதை நீங்களே இன்னொரு முறை படிச்சு பாருங்க. எனக்கென்னமோ எதோ தட்டச்சுத் தவறா இருக்கலாம்னு தோணுது.

//We don't have other choice for electricity.//

தற்போதைய மின் உற்பத்தியில் வெறும் 2% தான் அணு உலைகளில் இருந்து கிடைக்கிறது. மீதி 98% பிற வகைகளில் பெறப் படுகிறது. மின் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதைவிட தேசப் பாதுகாப்பும், மக்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரம் அதைவிட முக்கியமானது. இந்தியாவில் இருக்கும் அணு உலைகள் இவற்றுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன. ஏற்கனவே 5 மணி நேரம் இருட்டில் இருக்கப் பழகி விட்ட நம் மக்களுக்கு, நல்ல பாதுகாப்பான வழிகளில் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வரை கூடுதலாக ஒரு நிமிடம் இருட்டில் இருப்பதால் பெரிய தீங்கு ஒன்றூம் வந்து விடப் போவதில்லை.

//won't statisfy the needs like Nuclear Plant.//

அணு உலைகள் மூடப் படுவதால் மத்திய அரசின் ஈகோவுக்கும், அன்னிய (ரஷ்ய) நாட்டு நிறுவனத்தினால் லாபம் அடைந்தவர்களுக்கு மட்டுமே திருப்தியிருக்காது.