Tuesday, November 15, 2011

நவம்பர் 17 மற்றும் 18 ம.தி.மு.க. போராட்டங்களும் மக்கள் தொடர்பும்..

வரும் நவம்பர் 17 அன்று சென்னையில் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், மீண்டும் அவர்களைப் பணியிலமர்த்தி, பணி நிரந்தரம் கோரியும் மறுமலர்ச்சி நாயகன், வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மறுநாள் நவம்பர் 18 அன்று தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் புரட்சிப் புயல் வரலாற்று நாயகன் வைகோ அவர்கள் தலைமையில் உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து ஒருநாள் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டமும் நடைபெறவிருக்கிறது.






முதல் நாள் சென்னை ஆர்ப்பாட்டம் ஒரு குறிப்பிட்ட (சுமார் 12000) எண்ணிக்கையிலான மக்களுக்கு தமிழக அரசால் இழைக்கப் பட்ட அநீதியைக் கண்டித்து நடைபெறுகிறது. மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் 1989-1991 ஒன்றுபட்ட தி.மு.க. (தி.மு.க மற்றும் ம.தி.மு.க) அரசால் நியமனம் செய்யப் பட்டவர்கள். இவர்கள் அனைவருமே தி.மு.க. ஆதரவானவர்கள் அல்லது பின்னாளில் அ.தி.மு.க அரசால் (1991-1996) பணி நீக்கம் செய்யப் பட்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியில் (1996-2001) பணி வழங்கப் பட்டதால் முழுமையாக தி.மு.க. ஆதரவாளர்களாக மாறிப் போனவர்கள். எப்போதெல்லாம் அ.தி.மு.க ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் பணி நீக்கம் செய்யப் படுவதும் மீண்டும் தி.மு.க. அரசு வரும் போதெல்லாம் மீண்டும் பணி வழங்கப் படுவதும் வழக்கமாகி விட்டது.

உண்மையில் இவர்களுக்காக முன்னாள் ஆளுங்கட்சியான திமுகவோ அல்லது இன்னாள் எதிர்க்கட்சியான தேமுதிகவோ போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால் முன்னது தங்கள் கட்சியின் இளவரசி, தலைவரின் புதல்வியே ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறைப்பட்டவரை வெளியில் கொண்டு வர வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்த முன்னாள் அமைச்சர்களும் அவரவர் வசதிக்கேற்ற வழியில் ஊழல் செய்து சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களாவது, மக்கள் நலப் பணியாளர்களாவது என்று அவனவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதில் மும்மரமாக உள்ளனர்.

பின்னதோ சட்டசபைக்கு ஏன் போகலைன்னு யாருமே கேக்கலைன்னாலும், தானே வலிய வந்து எல்லாரும் என்னையே கேக்கிறீங்களே? அவங்க போனாங்களா? அவங்கள யாராவது கேட்டீங்களா? அவங்க போகாததுனால நானும் போக மாட்டேன்னு பினாத்துது. நூலகம் மூடப் படும்னு சொல்லி, மூணு நாள் ஆனபிறகு நீதி மன்றத்தால் தடையே விதிக்கப் பட்டபிறகுதான் அண்ணனுக்கு தெளிஞ்சப்புறம் மைத்துனனிடம் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு ஒரு அறிக்கை விடுது. இனிமே எதாவது தேர்தல் வந்தா மட்டும்தான் வெளியிலேயே வரும் போல இருக்கு. வெயில் பட்டா கருத்துருவான்னு எவனும் மைத்துனர் சொல்லியிருப்பான்போல.

ஆனால் மக்கள் சக்தி இயக்கமான மறுமலர்ச்சி தி.மு.க இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. பாதிக்கப் பட்ட 12000 பணியாளர்களை மீண்டும் பணியிலமர்த்த வேண்டிமெனக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. வழக்கமாக சென்னையில் நடைபெறும் போராட்டங்களில் பெருமளவிலான ம.தி.மு.க கழகத்தோழர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். கட்சி சார்பற்ற பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சாலையில் பேரூந்துகளிலும், பிற வாகனங்களிலும் கடந்து செல்லும் மக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தை ஒரு இடையூறு என்ற அளவில் தான் கவனிப்பார்களே தவிர அதன் நோக்கமோ, விளைவுகளோ தெரிவதில்லை. ம.தி.மு.க நடத்தும் போராட்டங்களில் இம்மியளவும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பது வேறு விடயம். ஆனால் வரும் நவ. 17 நடைபெற இருக்கும் போராட்டம் எல்லாப் பொது மக்களுக்குமான போராட்டமல்ல. இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு இழைக்கக் பட்ட அநீதியை திரும்பப் பெறவேண்டி நடத்தப் படும் போராட்டம்.

நீதி மன்றத்தில் பெறப் பட்டிருப்பது இடைக்காலத் தடை மட்டுமே. இந்தத் தடையினால் கிடைக்க இருப்பது இடைக்கால பணிதானே ஒழிய, நிரந்தரமான பணியல்ல. ஆகவே, அரசே முன்வந்து மீண்டும் பணி வழங்கினால் மட்டுமே அவர்களுக்கு பணி நிரந்தரமாகும். அதற்கான போராட்டத்தை ம.தி.மு.க.. முன்னெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம் பயன் பெறப் போகும் 12000 குடும்பங்களில் இருந்து குடும்பத்திற்கு ஒருவராவது கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொள்ள முடியாத நிலையிருந்தாலும் சென்னை மற்றும் சுற்றுப் புற மாவட்டங்களிலிருந்து சுமார் ஐயாயிரம் பேராவது கலந்து கொண்டால் இப்போராட்டம் பெரும் வெற்றி பெறும்.

இது போன்ற போராட்டங்களில் ம.தி.மு.க கழகத்தோழர்கள் கலந்து கொள்வது எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதை விட இன்றிமையாதது மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொள்வது. மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைந்திட, பணி நிரந்தமாகிட மக்கள் தலைவர் வைகோ பின் அனைவரும் அணிவகுப்பதே சிறந்தது என்பதை அனைவருக்கும் உணர்த்தி அவர்கள் முழுமையாக பங்கேற்கச் செய்ய வேண்டும்.

அது போலவே நவ. 18 ல் தஞ்சையில் உர தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு கண்டித்து நடைபெறும் உண்ணாநிலை அறப்போரில் வெகுவளவு விவசாயிகள் பங்குபெறச் செய்திட வேண்டும்.

பாதிக்கப் பட்டோர் மற்றும் பயன் பெறுவோரை அதிகளவில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் போராட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய முடியும். அதற்கு அனைத்து வகை ஊடகங்களையும் மக்கள் தொடர்பு சாதனங்களையும் பயன் படுத்தி மறுமலர்ச்சி தி.மு.க வின் போராட்டத்தின் நோக்கங்களையும், பயன்களையும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாளைய தமிழகத்தின் விடியல் வசந்தத்தின் தூதுவன் வைகோ வழியில்..

1 comment:

Anonymous said...

Nandri..Good one