தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
எழுதியவர்: கவிஞர் புதுவை.ரத்தினதுரை
தமிழீழம் பெறும் நோக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகியரை நினைவுகூரும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்ப் இயக்கத்தின் சார்பில் நவம்பர் 27 சென்னையில் தியாகராய நகர் பேரூந்து நிலையம் அருகில், முத்துரங்கன் சாலையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டமும் நினைவஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. வசந்தத்தின் தூதுவன் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, ஆவடி மனோகரன், பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருக. தமிழுணர்வு பெறுக.
Monday, November 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment