Tuesday, April 20, 2010

முல்லைப் பெரியாறும் கையாலாகாத கருணாநிதியும்

முல்லைப் பெரியாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதில் கேரள அரசு எவ்வளவு முனைப்புக் காட்டுகிறது என்று பார்க்கும் போது மக்கள் இயக்கத்தின் மகத்துவம் நமக்கு புலப்படுகிறது. மக்கள் இயக்கத்தின் மகத்துவம் என்று பேசுகிற வேளையில், கேரள அரசின் செயல்பாட்டை காணும்போது இதிலும் புகுந்து செயற்கையாய் ஒன்றை உருவாக்க முடியும் என்றென்ண்ணுகிற போது அடப் பாவிகளா? என்ற அங்கலாய்ப்புதான் தோன்றுகிறது.







முல்லைப் பெரியாறு அணைக்கட்டு தமிழகத்தின் மலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் ஆங்கிலேய அரசு மற்றும் அக்கால ஆற்காடு வீராசாமி போன்ற மங்குனி மந்திரிகளாலும் பக்கத்து நாட்டிடம் பகிர்ந்துகொள்வோம் என்ற அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப் பட்டு 900 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பெறப் பட்டு தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களான மதுரை, கம்பம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற பகுதிகளின் பாசன தேவை நிறைவேற்றப் பட்டு வந்துள்ளது. முல்லைப் பெரியாறின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அத்தனையும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு வழக்கை பொறுத்த வரையில் நீதியை நிலைநாட்டவேண்டிய உச்ச நீதிமன்றம் கேரள அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என வடிவேலு பாணியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதாவது 152 அடிஉயரமுள்ள நீர்த்தேக்கத்தில் 142 அடி நீரத்தேக்கிவைத்துக் கொள்ளலாம் என்று. இந்த அளவிற்குக் கூட மனமிறங்காத மலையாள அரசு அணைக்கட்டு பகுதியில் உல்லாச விடுதிகள் கட்டி வைத்துள்ள தொழிலதிபர்களின் நிர்ப்பந்தத்திற்கு கட்டுப் பட்டு நீரளவை உயர்த்த ஒத்துழைக்காததுடன் ஒரு நயவஞ்சக சட்டத்தை இயற்றி இந்திய ஒருமைப் பாட்டிற்கு வேட்டு வைத்துள்ளதுடன் உச்ச நீதி மன்றத்தில் ஏற்கனவே வழங்கப் பட்ட தீர்ப்பை முடக்கியுள்ளது.

கேரள அரசு இத்தனை செய்தும் தமிழக அரசு தன் பொறுப்பை உணராமலும், தட்டிக் கழிக்கும் வகையிலும் ஒரு செயலற்ற கையாலாகாத அரசாக வெறுமனே வேடிக்கை பார்த்து வருகிறது.

கேரள அரசு இதுவரை இந்த வழக்கில் முன்னேறிச் செல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். கேரள முதல்வர் வெறுமனே வழக்கை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைத்துவிட்டு நடிகைகளின் ஆட்டம் பார்க்கவும், நடிகர்களின் பாராட்டு விழாவில் மூழ்கித்திழைக்கவும் இல்லை. மாறாக இதனை ஒரு மக்கள் போராட்டமாக போலியாகவேனும் எடுத்துச் சென்று அதனை உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் அழுத்தமாகத் தந்து வெற்றி பெற்றுள்ளார்.

மலையாளிகளின் போராட்டத்தை போலியான, கணிப்பொறி மூலம் உருவாக்கப் பட்ட வரைகலைப் படங்களின் உதவியோடு மாநில அரசே மக்கள் மனதில் ஒரு பாதுகாப்பற்ற சூழ்லை உருவாக்கி அவர்களை போரடச் செய்து அந்த போராட்டங்களையே மத்திய அரசுக்கும் உச்ச நீதி மன்றத்திற்கும் அழுத்தமாகத் தந்து காரியம் சாதித்து வந்துள்ளது. இனியும் அவ்வாறே செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடப்பதென்ன? மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவாகும் போராட்டங்களை திட்டமிட்டு தடுப்பதுடன் அது பற்றிய செய்திகள் வெளிவந்தால் எங்கே தான் காலில் விழுந்து கிடக்கும் தன் எஜமானர்கள் கோபித்துக் கொண்டு விடுவார்களோ என்றெண்ணி இருட்டடிப்பு செய்து மக்கள் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் கேடுகெட்ட செயலில் கருணாநிதி அரசு இறங்கியுள்ளது.

இதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் தற்போது நடைபெறும் பார்வதியம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளலாம். எங்கே வைகோவும் பழ.நெடுமாறனும் பெயர் வாங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று எண்ணி அந்த மூதாட்டியை சிகிச்சை பெற விடாமல் திருப்பி அனுப்பி அதில் ஆனந்தப் பட்டுக் கொள்ளும் கேடு கெட்ட செயலைப் போலவே முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழர் நலன் காக்கும் போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது இந்த கருணாநிதி கும்பல். செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டு தமிழர் நலனைக் காத்திருந்தால் மக்கள் போராட வேண்டிய அவல நிலையே வந்திருக்காதே?

இந்த சூழ்நிலையில் மே 28 ல் மதிமுக மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே பல்வேறு நிலைகளில் மக்களின் பேராதரவுடன் முல்லைப் பெரியாறு பாதுகாப்பு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள மதிமுக இந்த போராட்டத்திலும் வெற்றி பெறும் என்பதில் அய்யமில்லை.

No comments: